Showing posts with label Ekadasi. Show all posts
Showing posts with label Ekadasi. Show all posts

பாிவர்த்தனீ - வாமன ஏகாதசி

பாிவர்த்தனீ - வாமன ஏகாதசி.....!!! (9.9.2019)

பாிவர்த்தனீ - வாமன ஏகாதசி
ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்....!

ஸ்ரீ கிருஷ்ணரும் தர்மபுத்திரரின் வேண்டுகோளுக்கு இணங்கி பதிலளிக்கையில், " யுதிஷ்டிரா,   வாமன ஏகாதசி நாளில் பூரணமாக விரதத்தை கடைப்பிடிப்பவர் பெரும் புண்ணியத்தை அடைவதோடு, இறுதியில் மோட்சப்பிராப்தியும் பெறுவர். ஒருவரது பாவங்கள் அனைத்தையும் நீக்கி உயர்வு அளிப்பதால், இதை ஜெயந்தி ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த ஏகாதசியின் மஹிமையை சிரத்தையுடன் கேட்பவருக்கும் அவரது பாவங்களிலிருந்து விமோசனம் அளிக்கும் மகத்தான நாளிது. இந்நாளில் உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிப்பவர் அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான புண்ணியத்தை பெறுவர்.  மோட்சப்பிராப்தியை எளிதில் அடைவதற்கு மார்க்கத்தை அருளும் இந்நாளுக்கு இணையாக வேறு எந்த ஏகாதசி நாளும் இல்லை. ஆகவே இன்னல் நிறைந்த இவ்வுலக வாழ்க்கை சக்கரத்திலிருந்து விடுதலை பெற விரும்புவோர், வாமன ஏகாதசி அன்று உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று விரத வழிமுறைகளின் படி விரதத்தை கடைப்பிடிப்பவர், தாமரை இதழ்களை ஒத்த கண்களுடன், மூன்று அடிக்கும் குறைவாக சிறு (குள்ள) ரூபத்தில் பகவான் மஹாவிஷ்ணு,  வாமனராக அவதாரம் எடுத்த வடிவில் வழிபட வேண்டும்.  வாமன அவதார ரூபத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுபவர், இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் ஸ்ரீ ஹரியின் இருப்பிடமான வைகுண்டப்பிராப்தியையும் பெறுவர். விரதங்களில் மேன்மையானது ஏகாதசி விரதம். அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் மேன்மையானது வாமன ஏகாதசி நாள். மூன்று லோகங்களிலும் இதற்கு இணையான நாள் கிடையாது " - என்று அருளினார்.

நித்திரையில் ஆழ்ந்திருக்கும் மஹாவிஷ்ணு தன்னுடைய சயன கோலத்தை மாற்றும் நாள் ஆதலால் வாமன ஏகாதசி மிகவும்  சுபமங்கள நாளாக முக்கியத்துவம் பெறுவதுடன், பரிவர்த்தனி ஏகாதசி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மஹாராஜா யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரிடம் - " ஜனார்த்தனா,  மூலப் பரம்பொருளான மஹாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்திருப்பது எப்படி? அக்கணம் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது, சயன கோலத்தை மாற்றுவது எப்படி?  மஹாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது இவ்வுலக ஜீவராசிகளுக்கு என்ன நேர்கிறது. அவர்களின் நிலை என்ன? தாங்கள் அசுரர்களின் தலைவனான மஹாபலி சக்ரவர்த்தியை அடக்கியது எப்படி.? பிராமணர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசீர்வாதத்தை எப்படி பெறுவது.? தாங்கள் பவிஷ்ய புராணத்தில் உரைத்துள்ள சாதுர்மாஸ்ய விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது.?  தாங்கள் என் மீது கருணை கொண்டு என்னுடைய சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் "என்று வேண்டினார்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அதற்கு பதிலளிக்கையில்- அரசர்களில் சிங்கம் போன்றவனே, உனக்கு ஒரு வரலாற்று நிகழ்வை சொல்வது, எனக்கு மிகவும் மகிழ்வை அளிக்கிறது. இந்நிகழ்வானது, கேட்பவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கும் மஹிமை வாய்ந்தது. திரேதாயுகத்தில், பலி என்னும் பெயர் கொண்ட அரசன் இருந்தான். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், என் மீது மிகவும் பக்தி பூண்டிருந்தான். என்னை மகிழ்விக்க வேதம் ஓதுதல், ஹோமம் என அனைத்தையும் விடாமல் நடத்தி வந்தான். இருமுறை பிறப்பு எடுக்கும் பிராமணர்களை மதித்து தினசரி ஹோம காரியங்களில் ஈடுபட்டு வந்தான். அத்தகைய புண்ணிய ஆத்மாவானவன், ஒரு முறை இந்திரனுடன் சண்டையிட நேர்ந்தது. அச்சண்டையின் இறுதியில் இந்திரனை தோற்கடித்து என்னால் இந்திரனுக்கு அளிக்கப்பட்ட இந்திரலோகம் முழுவதையும் எடுத்துக் கொண்டான். ஆதலால் இந்திரனும் மற்ற தேவர்களும், ரிஷி, முனிவர்கள் சூழ என்னிடம் வந்து, பலிச் சக்ரவர்த்தியைப் பற்றி முறையிட்டனர். சிரம் நிலம் தொட, தேவ குரு பிரகஸ்பதி வழிகாட்ட, வேத ஸ்தோத்ரங்களை துதித்தபடி வழிபட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று நான் என் ஐந்தாவது அவதாரமாக, வாமன அவதாரம் எடுத்து அவர்கள் சார்பாக பலியிடம் செல்லுவதாகக் கூறினேன்" என்றார் ஸ்ரீகிருஷ்ணர். 
யுதிஷ்டிரர் கண்ணனிடம் - " பிரபு, மகத்தான ஆற்றல் பெற்ற அசுரகுலத் தோன்றலான அரசன் பலியை வாமனனாக (சிறு குள்ள வடிவில்) அவதரித்து தாங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பதை விரிவாக தங்கள் பக்தனுக்கு எடுத்துரைக்க வேண்டும்" என்று வேண்டினார். ஸ்ரீகிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில், "நான் வாமனனாக அவதரித்து இருந்தாலும், பிராமணனாக பக்திமான் அரசன் பலியிடம் சென்று எனக்கு நிலம் தானம் அளிக்குமாறு வேண்டினேன். நான் வாமனன் ஆதலால் எனக்கு மூன்று அடி நிலமே மூவுலகங்களுக்கும் சமமானது. அரசன் பலியும் காலம் தாழ்த்தாது என் வேண்டுகோளை ஏற்று மூன்று அடி நிலம் தானம் அளிக்க சம்மதித்தான். பலி வாக்களித்தவுடன், நான் விஸ்வரூபம் எடுத்தேன். என்  பாதம் புவியையும், தொடை புவர்லோகத்தையும்,  இடுப்பு ஸ்வர்க்க லோகத்தையும், வயிறு மஹர்லோகத்தையும், மார்பு ஜனலோகத்தையும், கழுத்து தபோலோகத்தையும், தலை சத்யலோகத்தையும், முகம் மற்ற அனைத்து படைப்புகளையும் அளந்து நிறைவு செய்தது. அனைத்து கிரகங்களும், சந்திரன், சூரியன் உட்பட என் விஸ்வரூபத்தில் அடங்கினர்.
இந்த விஸ்வரூப விளையாட்டினை கண்டு இந்திரன், ஆதிசேஷன் மற்றும் அனைத்து தேவர்களும் வேத மந்திர துதிகளால் பிரார்த்தனை செய்தனர். பின்னர் அரசன் பலியை என் கைகளில் ஏந்தி, -"குற்றமற்றவனே, பூவுலகம் முழுவதும் என் ஒரு பாதத்தின் கீழும், மேலுலகம் முழுவதும் மற்றொரு பாதத்தினாலும் அளக்கப்பட்டது. வாக்களித்தபடி மூன்றாவது அடி நிலத்திற்காக நான் என் பாதத்தை எங்கு வைப்பது என்று கேட்டேன். இதைக் கேட்டவுடன், அரசன் பலி மிகவும் பணிவுடன் தலை வணங்கி குனிந்து, மூன்றாவது அடியை வைக்க தன் சிரசினை அளித்தான். ஒ யுதிஷ்டிரா, என் பாதத்தை பலியின் சிரசின் மீது வைத்து பலியை பாதாள லோகத்திற்கு அனுப்பி வைத்தேன். பலியின் அடக்கத்தையும், பணிவையும் கண்டு நான் மிகவும் மகிழ்ந்து பலியின் இருப்பிடத்தில் நிரந்தரமாக வசிப்பேன் என்று வரம் அளித்தேன்.

பின்னர், பரிவர்த்தனீ ஏகாதசி அன்று, பக்த பிரகலாதனின் பேரனான, விரோசனின் மைந்தனான பலி, என்னுடைய பிரதிமையை தன் இருப்பிடத்தில் பிரதிஷ்டை செய்தான்.  யுதிஷ்டிரா, ஹரிபோதினி ஏகாதசி வரை, அதாவது கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி வரை, நான் வைகுண்டத்தில் நித்திரையில் ஆழ்ந்திருப்பேன். இக்காலம் சாதுர்மாஸ்யம் என அழைக்கப்படும். இக்காலத்தில் செய்யப்படும் தான, தர்மங்கள், பூஜை, வழிபாடுகள் மிகுந்த புண்ணியத்தை வழங்கும் சக்தி பெற்றது.
ஆகவே பரிவர்த்தினீ ஏகாதசி மிகவும் கவனத்துடன் அனுஷ்டிக்க வேண்டும். இந்த ஏகாதசி உபவாச விரதம் மேற்கொள்பவர் பாவங்கள் நீங்கப்பெற்று பரிசுத்தம் பெறுவர். விரத நாளன்று, பக்தர்கள் பிரபு திரிவிக்ரமர், வாமன தேவரின் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். இந்நாள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் மஹாவிஷ்ணு சயன கோலத்தை மாற்றும் நாளாகும். முடிந்தவரை. தயிர் கலந்த சாதம் மற்றும் சிறு அளவு வெள்ளியை வேத அத்யயனம் செய்யும் பண்டிதர்களுக்கு தானம் அளிப்பது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும். தானம் அளிப்பதுடன் அன்று இரவு விழித்திருந்து பகவத் புராணம், கீர்த்தனை என்று பகவானின் நாம பாராயணம் செய்ய வேண்டும். எளிதில் கடைப்பிடிக்கக் கூடிய இந்த வழிமுறை உலக விஷய‌த்திலிருந்து விடுதலை பெறும் மார்க்கத்தை வழங்கக் கூடியது.   விதி வழிமுறைகளின்படி இந்த பரிவர்த்தனீ ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர் இவ்வுலகில் இகபர சுகங்களுடன் வாழ்வதுடன், முடிவில் வைகுண்டப் பிராப்தியும் அடைவர். இவ் ஏகாதசி விரத மஹாத்மியத்தை பக்தி சிரத்தையுடன் கேட்பவர், முடிவில் தேவலோகத்தை அடைந்து சந்திரனைப் போன்று ஒளியுடன் வாழ்வர். இவ் ஏகாதசி விரதம் மேற்கொள்ளுவது ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதற்கு ஒப்பானதாகும்" என்றருளினார்..
ப்ரம்ம வைவர்த்த புராணம்,   பார்ஷ்வா - வாமன ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.

அஜ ஏகாதசி

முன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்......!!!
(26.8.2019)

நாளைய தினம் அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.

அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார்.

முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது.

விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி. ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.

பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்தனை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலிருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார். அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.

அரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரா, உனது நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.

இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு . இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.

அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.

அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், ஓ பாண்டு புத்ரா, நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள், எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் பக்தி லோகத்தை அடைவர் என்று கூறினார்.

எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.

காமதா ஏகாதசி

காமதா ஏகாதசி

பங்குனி, சித்திரை மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தோழனான அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்," ஹே மதுசூதனா! உனக்கு என்னுடைய அநந்த கோடி நமஸ்காரங்கள். பிரபு, தாங்கள் தயைகூர்ந்து பங்குனி-சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியத்தை வர்ணிக்க வேண்டுகிறேன். அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம், அவ்விரதத்தை கடைப்பிடித்து மேன்மை பெற்றவர்கள் மற்றும் அவ்விரதம் அனுஷ்டிப்பதால் எவ்வித நற்பலன்கள் கிட்டுகின்றன ஆகிய அனைத்தையும் கூற வேண்டுகிறேன்." என்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு," ஹே ! பார்த்தா, ஒரு சமயம் குரு வசிஷ்டரிடம் ராஜா திலீபனும் இதே கேள்வியைக் கேட்டான். ஆகையால் அவர்கள் இருவரிடையே நடந்த சம்வாதத்தை  உனக்கு சொல்கிறேன். கேள்." என்றார். ராஜா திலீபன் குரு வசிஷ்டரிடம்," குருதேவா, பங்குனி-சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர் என்ன? அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம், பூஜை விதிகள் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் அனைத்தையும் தாங்கள் கிருபை கூர்ந்து விவரமாக கூற வேண்டும்." என்றான்.அதற்கு பதிலளிக்கையில் மஹரிஷி வசிஷ்டர்," ராஜன்! சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி, காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இவ் ஏகாதசி விரதமானது அனுஷ்டிப்பவர்களின் சகல விதமான பாவங்களையும் நீக்கி மோட்சப்பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது. உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ, அதே போல் காமதா ஏகாதசி விரதத்தின் புண்ணியபலனின் பிரபாவம், சகல வித பாபங்களையும் நீக்குவதோடு, புத்ர பிராப்தியையும் அளிக்கிறது. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கர்மவினையின் காரணமாக இழி நிலை பிறவி எடுத்தவர் அதிலிருந்து விடுதலை பெறுவதுடன், இறுதியில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர். இப்போது உனக்கு, இவ் ஏகாதசியின் மஹாத்மிய கதையை கூறுகிறேன். கவனத்துடன் கேள்." என்றார்.
பழங்காலத்தில் போகீபுர் என்னும் நகரை புண்டரீகன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் நகரானது அனைத்து வளங்களும் பெற்று ஐஸ்வர்யத்துடன் விளங்கியது. அந்நகரில் அநேக அப்சரஸ், கந்தர்வர், கின்னரர் வசித்து வந்தனர். அதில் சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்ற லலித் மற்றும் லலிதா என்னும் கந்தர்வ தம்பதியினர் அழகான மாளிகையில் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் இடையில் கற்பனையில் கூட பிரிவு என்பதை ஏற்க இயலாத அளவு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் ப்ரேமையும், காதலும் கொண்டிருந்தனர்.  ஒரு முறை அரசன் புண்டரீகன் இசையரங்கத்தில் கந்தர்வர்களுடன் அமர்ந்து சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அங்கு மற்ற கந்தர்வர்களுடன் சேர்ந்து கந்தர்வனான லலித்தும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் அவனுடைய காதல் மனைவியான லலிதா அங்கு இருக்கவில்லை. பாடிக் கொண்டிருந்த லலித்துக்கு திடீரென்று அவளது நினைவு எழ, அதன் காரணமாக சுருதி விலகி பாடலை தவறாக பாட நேர்ந்தது. அதைக் கண்ட நாகராஜனான கார்கோடகன் அரசன் புண்டரீகனிடம் அவனைப் பற்றி புகார் செய்தான். அதை விசாரித்த அரசன் புண்டரீகன், லலித் மீது மிகுந்த கோபம் கொண்டு," துஷ்டனே ! துர்மதி பெற்றவனே ! என் முன்னிலையில் பாடல் பாடும் பொழுது கூட உன் மனைவியை நினைத்துக் (ஸ்மரணம்) கொண்டிருந்து சங்கீதத்திற்கு அவமரியாதை செய்துள்ளாய். ஆதலால் உன்னுடைய இந்த பாபவினையின் தண்டனையாக, நீ நரமாமிசம் தின்னும் ராட்சஸான ஆக மாறுவாய் " என்று சாபம் இட்டான். அரசனின் சாபம் பெற்ற கந்தர்வன் லலித் அக்கணமே கோர வடிவுடைய ராட்சஸனாக மாறினான். அவனுடைய முகம் காண்பவர்களுக்கு அச்சத்தையும், பயத்தையும் அளிக்கக் கூடிய பயங்கர ரூபத்தை பெற்றது. கண்கள் இரண்டும் சூரிய, சந்திரனைப் போன்று கனன்று ஒளியை உமிழ்ந்து கொண்டு இருந்தன.   வாயிலிருந்து அக்னி பிழம்புகள் வெளி வந்து கொண்டிருந்தது. அவனது மூக்கு மலையின் கீழ் உள்ள குகையைப் போன்றும்,   கழுத்து மலையைப் போன்றும் விளங்கியது.  ராட்சஸனாக மாறி  கந்தர்வன் லலித் மிகுந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது.

ப்ரியத்துக்கு உரிய தன் நேசனுக்கு நேர்ந்ததைக் கேட்ட லலிதா மிகுந்த துக்கமும், மனவேதனையும் கொண்டு, தன் கணவரை இந்நிலையிலிருந்து விடுவிக்க எங்கு செல்வது, என்ன செய்வது என்று அறியாது திகைத்தாள். எப்படி தன் கணவரை இந்த நரகத்திலிருந்து மீட்பது என்று யோசித்தாள்.ராட்சஸனாக மாறிய கந்தர்வன் லலித் காட்டில் இருந்துக் கொண்டு அநேக பாபங்களை செய்ய ஆரம்பித்தான். அவனுடைய மனைவி லலிதை அவன் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்து அவனுடைய நிலையை எண்ணி வருந்தினாள். இப்படியாக தன் கணவனை பின் தொடர்ந்து இறுதியில் விந்தியாசல் பர்வதத்தை அடைந்தாள். அங்கு அவள் சிருங்கி முனிவருடைய ஆசிரமத்தைக் கண்டாள். ஆசிரமத்தைக் கண்டதும் உடனடியாக அதனுள் சென்று முனிவரை நமஸ்கரித்து பின் வினயத்துடன் அவரிடம்,"முனிவரே !, நான் வீர்தன்வா என்னும் கந்தர்வனின் மகள். என் பெயர் லலிதா. என் கணவர் அரசன் புண்டரீகனின் சாபத்தால் கோர ராட்சஸனாக மாறிவிட்டார்.  அவருக்கு நேர்ந்த இந்த துர்பாக்கிய நிலைமை எனக்கு மிகுந்த துக்கத்தையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும் நித்தமும் அவர் படும் பாட்டைக் கண்டு நான் சொல்லவொண்ணா வேதனையை தவித்துக் கொண்டு இருக்கிறேன்.  முனி சிரேஷ்டரே !, தாங்கள் தான் கருணையுடன் என் கணவர் இந்நிலையிலிருந்து விடுதலை பெற ஏதாவது சிறந்த உபாயத்தை கூற வேண்டும்." என்று பிரார்த்தித்தாள்.

லலிதையின் கதையைக் கேட்ட சிருங்கி முனிவர்," கந்தர்வ கன்னிகையே !, சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை காமதா ஏகாதசி என்று அழைப்பர். அன்று ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வத்துடன் உபவாசம் இருந்து அனுஷ்டித்தால் மனிதர்களின் அனைத்து காரியங்களும் சீக்கிரமே சித்தி அடையப் பெறும். அன்று நீ விரதம் அனுஷ்டித்து அவ்விரத புண்ணிய பலனை உன் கணவருக்கு அளித்தால், அரசனின் சாபத்தால் ராட்சஸ ரூபத்தை அடைந்த உன் கணவன் அதிலிருந்து விமோசனம் பெறுவான்." என்று ஆசீர்வதித்தார்.முனிவரின் வார்த்தைகளின் படி லலிதா ஆனந்தத்துடன் காமதா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டித்தாள். மறு நாள் துவாதசியன்று பிராம்மணர் முன்னிலையில் தான் பெற்ற விரத புண்ணிய பலனை கணவருக்கு அர்ப்பணித்தாள்  பகவான் மஹாவிஷ்ணுவை வணங்கி,"ஹே பிரபோ வாசுதேவா, ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நான் பெற்ற புண்ணிய பலன் அவரை சேர்ந்து, அதன் பிரபாவத்தால் அவர் சாபத்திலிருந்து விடுதலை அடைய தங்களை பிரார்த்திக்கிறேன்." என்று வேண்டிக் கொண்டாள்.ஏகாதசி விரதத்தின் புண்ணிய பலனால் அவள் கணவன் லலித் ராட்சஸ ரூபத்திலிருந்து விடுதலை பெற்று தன் பழைய கந்தர்வ சொரூபத்தை அடைந்தான். அழகிய ஆடை, ஆபரணங்களுடன் தன் மனைவி லலிதாவுடன் மீண்டும் ஆனந்தமாக வாழத் தொடங்கினான். காமதா ஏகாதசியின் பிரபாவத்தால் முன்பை விட மிகவும் செழிப்புடன் இருவரும் வாழ்ந்தனர். இறுதியில் இருவரும் புஷ்பக விமானத்தில் அமர்ந்து ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெற்றனர்

ஹே பார்த்தா !  விதிப்பூர்வத்துடன் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் அனைத்து பாபங்களும் நீங்குகிறது. இவ் விரதத்தின் புண்ணிய பலனானது பிரம்மஹத்தி போன்ற கொடிய பாபங்களிலிருந்தும், மனித சொரூப இல்லா இதர யோனி பிறவிகளிலிருந்தும் விடுதலை அளிக்கிறது. உலகத்தில் இவ்விரதத்திற்கு நிகரான விரதம் வேறெதுவும் இல்லை. காமதா ஏகாதசி விரத கதை (அ) மஹாத்மியம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் அத்யந்த பலனை அளிக்கக் கூடியது.

மனிதர்கள் எப்பொழுதும் தன் சுகத்தைப் பற்றிய சிந்தனையில் உழல்கிறார்கள். இதில் தவறேதும் இல்லை எனினும் சதா சர்வகாலமும் அது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்று இருந்தால், அது நம் கடமைகளை மறக்கச் செய்து, அதனால் விளையும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது. கந்தர்வன் லலித்தும் கடமையை மறந்ததால், கோர ராட்சஸனாக மாறி வெறுக்கத்தக்க காரியங்களை செய்ததுடன், கஷ்டத்தையும் அனுபவிக்க நேர்ந்தது. பகவான் மஹாவிஷ்ணு தன் பக்தர்களின் மீது அளவில்லா க்ருபா கடாக்ஷத்தை அருள்பவர். பக்தர்கள் மனம் விரும்பிய வரத்தை அருள்பவர். தான் பெற்ற புண்ணிய பலனை மற்றவரின் நலம் கருதி அர்ப்பணிப்பதால், அந்நற்கர்மாவானது பன்மடங்கு பெருகி மிகுந்த சக்தி வாய்ந்ததாகிறது. அத்தகைய மேன்மையான தானத்தை செய்பவர் தெய்வத்திற்கு ஒப்பானவராகிறார்.

On 28.03.2018 Parana Time = 06:59 to 10.11(Chennai)

Ekadashi Tithi Begins = 03:43 on 27/Mar/2018
Ekadashi Tithi Ends = 01:31 on 28/Mar/2018