சோகத்தின் ஒரு ரேகையாவது தெரிகிறதா?


“சோகத்தின் ஒரு ரேகையாவது தெரிகிறதா? “இதுதான் equipoise!…”
பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம் பயின்றார்கள்?”
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா - தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஸ்ரீமடம், இளையாத்தங்குடியில் முகாம்.
அரசு அதிகாரி, நாலைந்து நண்பர்களுடன், காரில் புறப்பட்டு இளையாத்தங்குடி நோக்கிப் போய்க்
கொண்டிருந்தார்கள்.பேசாமலே எப்படிப் பயணம் செய்வது? பல பேச்சுக்களிடையில், அவர்கள் தரிசனம் செய்யப்போகும் மகாஸ்வாமிகளைப் பற்றிய பேச்சும் வந்தது.
“பெரியவாளுக்கு சம்ஸ்க்ருதம் நன்றாகத் தெரியும்…”
“தமிழ், தெலுங்கு, கன்னடமும் தெரியும்…”
“இங்கிலீஷில் சில வார்த்தைகள்தான் தெரிந்திருக்கும். Working Knowledgeதான் இருக்கும்….”
“நாம் பேசும்போது, இடையிடையே இங்கிலீஷ் வார்த்தை வந்துவிட்டால், புரிந்துகொள்வார்கள்….”
இளையாத்தங்குடி சென்று, பெரியவாள் அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். பத்து
நிமிஷத்துக்குப் பின், பெரியவா வெளியே வந்தார்கள். சுற்றிலும் ஆங்கிலம் நன்றாகப் படித்துத் தேர்ந்த அடியார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டே வந்தார்கள் பெரியவா.
பெரியவா: ” ஒவ்வொரு language-லும் சில peculiar வார்த்தைகள்இருக்கும். அந்த வார்த்தைகளை இன்னொரு பாஷையில் சுலபமாக மொழிபெயர்க்க முடியாது. இங்கிலீஷில் equipoise என்று ஒரு word.அதற்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்கோ….”
ஒவ்வொருவரும், பல மாதிரியாக விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், எந்த ஒரு சொல்லும் அந்த ஆங்கிலப் பதத்தின் முழுத்தன்மையை வெளிப்படுத்துவதாக இல்லை.
தரிசனத்துக்காக வந்திருந்த அரசு அதிகாரியையும் அவர் 
நண்பர்களையும் பார்த்து, “உங்களுக்குத் தெரியுமோ?” 
என்று பெரியவா கேட்டார்கள். 
அதிகாரிக்குக் குப்பென்று வியர்த்தது. தட்டுத் தடுமாறி 
ஏதோ விளக்கம் சொல்ல முயன்றார்; தோற்றுப் போனார்.
“Equipoise என்றால் mental equanimity என்று அர்த்தம்” என்று சொல்லிவிட்டு, (எல்லோரையும் அசரவைத்துவிட்டு!) வேறு பேச்சுக்குப் போய் விட்டார்கள் பெரியவாள்.(அதாவது
ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் மனம் குமைந்து வருந்துவதற்கு அவகாசம் கொடுக்கவில்லை.)
சிறிதுதூரம் நடந்து சென்றபின், ஹால் நடுவில் நின்றார்கள். 
தூரத்தில், சுவரோரமாக, ஒரு முதிய அம்மையார் 
உட்கார்ந்திருந்தார். கண்களை  
மூ
டிக்கொண்டிருந்தார். 
ஜபம் செய்து கொண்டிருந்தாற் போலிருந்தது.

“அந்த அம்மா எப்படி இருக்கா?”
“ரொம்ப சாந்தமா, அமைதியாக உள்ளுக்குள்ளே 
சஞ்சலமில்லாமே…..”
“அவர் யார் தெரியுமோ?”
யாரும் பதில் சொல்லவில்லை.
“கே.எஸ்.வெங்கடரமணின்னு பெரிய எழுத்தாளர். நிறைய புஸ்தகம் எழுதியிருக்கார்.
Kandan, the patriot; Murugan, the tiller எல்லாம் பிரஸித்தம்.(நானும் படிச்சிருக்கேன்!) இந்த நாவல்களில் rural-setting ரொம்ப நேச்சுரலா இருக்கும்.(அந்த அம்மாள் கே.எஸ்.வி-யின் மனைவி)
“பால் பிரண்டன் என்ற பிரெஞ்சு தத்துவஞானியை திருவண்ணாமலைக்கு அழைத்துக்கொண்டு போனார். என்னிடமும் அழைத்துக்கொண்டு வந்தார். பால்பிரண்டனுக்கு நம்ம தத்துவங்களில் ரொம்பப் பிடிப்பு.
“இந்த தம்பதிக்கு, ஒரே பிள்ளை. கே.எஸ்.வி.யும் போயிட்டார். பிள்ளை, சர்க்கார் விருந்தாளி! புரிகிறதா? பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கான்!
“சொந்த-பந்தம், சொத்து-சுதந்திரம் எதுவும் கிடையாது. 
மலை மலையாய் சோகம்…! அந்த அம்மாள் முகத்தில் 
சோகத்தின் ஒரு ரேகையாவது தெரிகிறதா?
“இதுதான் equipoise!…”
பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம் பயின்றார்கள்?
நாவில் நிற்பது வாக் தேவதை;இல்லை, talk தேவதை!