க்ளப்பிலும் ஹாஸ்டலிலும் ஹைஜீன் சுத்தமே இருக்குமா

க்ளப், கான்டீன், ஹாஸ்டல், மெஸ் இதுகள் எதையும் நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. நானென்றால் என்ன? சாஸ்திரம் சொல்கிறதை, சாஸ்திரஜ்ஞர் சொல்கிறதைத்தான் நான் ஒப்பிக்கிறேன். சாஸ்திரம் ஒப்புக்கொள்கிறதை நான் ஒப்பிக்கிறேன்! க்ளப்பிலும் ஹாஸ்டலிலும் ஹைஜீன் சுத்தமே இருக்குமா என்பது ஸந்தேஹந்தான். வெளியிலே எல்லாம் ‘நீட்’டாக இருந்தாலும் உள்ளே எத்தனை அசுத்தமிருக்குமோ? இதிலே சுத்தமாயிருக்கிறதென்றே வைத்துக் கொண்டாலும் ஆசார சுத்தி, பண்ணுகிறவர்களின் மனஸ் சுத்தி என்பது இங்கெல்லாம் கொஞ்சங்கூட இருக்காது. பகவத் ஸ்மரணையோ, நாம் நன்றாயிருக்க வேண்டுமென்ற பிரேமையான எண்ணமோ, ஆசார அநுஷ்டானமோ துளிகூட இல்லாத எவனோ சமைத்துப் போடுகிறதைச் சாப்பிடுவதில் ஒரு நல்லதும் வராது. வேறே எந்தத் தொழிலும் கிடைக்காமல்தான் அநேகமாக இதற்கு வருவானாதலால் அவனுக்குப் புத்தியும் அதிகமிருக்காது. இந்த நாளில் எல்லாரையும் பிடித்து ஆட்டுகிற பொருளாசை, ஸினிமா (காமம்) , பாலிடிக்ஸ் (க்ரோதம்) இவற்றில்தான் அவன் தோய்ந்து போனவனாயிருப்பான்.  அதனால் இவன் கைச் சாப்பாடு நல்லது பண்ணாதது மட்டுமில்லாமல் கெடுதலே பண்ணும்.

மனஸ் சுத்தம், வெளி சுத்தம் இரண்டையும் இணைக்கிற ஆசாரத்துக்கு க்ளப்பிலும், மெஸ்ஸிலும் ஏது இடம்? ஒரே எச்சில், துப்பல்தான். தினம் ஒரு தட்டில் – பல பேர் சாப்பிட்ட தட்டில் – தின்னணும். கோமயம் [சாணி] போட்டு எச்சில் இடுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா? டேபிள், நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பரிஷேசனம், ப்ரணாஹுதி1 பண்ணலாமா? ப்ராணாஹுதிக்கு ‘ஸெர்வர் ‘கவனமாக அபிகாரம்2 பண்ணுவானா? ‘ஏதோ தின்றோம்; இந்த மாம்ஸ பிண்டத்தை வளர்த்தோம்; ஜிஹ்வா சாபல்யத்தை [நாக்கின் சபலங்களை] அதனால் தீர்த்துக் கொண்டோம்’ என்றால் [சாஸ்திர விதி] எதுவும் வேண்டாம். ஆனால் இதற்காகவா ஈஸ்வரன் ஆறறிவுள்ள மநுஷ்யனாக நம்மைப் படைத்திருப்பது? இப்படித்தானென்றால் மிருக ஸ்ருஷ்டியோடேயே நிறுத்திக் கொண்டிருக்கலாமே!