பல் தேய்த்தல், வாய் கொப்பளித்தல் - இத்தனை விஷயங்களா?

பல் தேய்த்தல், வாய் கொப்பளித்தல் - இத்தனை விஷயங்களா?

பல் தேய்க்காமல் bed-coffee குடிப்பது அநாசாரத்துக்கு அநாசாரம்; அநாரோக்யத்துக்கு அநாரோக்யமும். 

ஒரே எச்சில் ப்ரஷ்ஷை பல நாளுக்கு வைத்துக் கொள்ளாமல் அன்றன்றும் ஒரு குச்சியால் தேய்த்துவிட்டு அதைப் போட்டு விட வேண்டும்.

ஆலங்குச்சி, வேலங்குச்சி இதற்கு எடுத்தது என்பதால்தான் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்பது.

இப்படியெல்லாம் நன்றாகப் பல் தேய்க்கணும், ஏப்பம் வரும் வரை கொப்பளிக்கணும் என்று போட்டிருக்கிற சாஸ்திரத்திலேயே சிராத்தம் முதலான தினங்களில் குச்சி போட்டுப் பல் தேய்க்காமல் வாயைக் குழப்பிக்கொண்டு கொஞ்சம் கொப்பளிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறது.

ஆசாரமென்றாலே சௌசமென்று சொல்லிவிட்டு இதென்ன அசுசியாயிருக்கிறதே என்று நினைக்கக் கூடாது. 

சிராத்தத்தில் ஸ்நானம், மற்ற மடி ஸமாசாரங்களை ஏகமாகச் சொல்லியுள்ள அதே சாஸ்திரத்தில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது என்பதாலேயே இதற்கு நமக்குத் தெரியாத காரணமிருக்க வேண்டுமென்று புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்குத் தெரியும்படியாகவும் ஒரு காரணம் இந்தப் புஸ்தகம் போட்டவர் சொல்லியிருக்கிறார்.

அதாவது நன்றாகப் பல் தேய்த்து,  நாக்கை வழித்துக் கொண்டு, அப்புறம் கொப்பளித்தால் பித்த நீரெல்லாம் வெளியே வந்துவிடும்; மற்ற நாட்களில் அப்படி வர வேண்டியது தான்; ஆனால் இப்படிப் பித்தநீர் வந்தவுடன் பசி எடுத்து விடும்; மற்ற தினங்களில் அப்போது பாலோ, மோரோ, கஞ்சியோ பானம் பண்ணிக் கொள்ளலாம்.

ஆனால் சிராத்த தினத்தில் ஒட்ட ஒட்டக் கிடக்க வேண்டும். அன்றைக்கு ரொம்பவும் லேட்டாக அதாவது மத்யான்னம் ஒரு மணிக்கு மேலே அபரான்ன காலத்தில் தான் சிராத்த கர்மா ஆரம்பித்து, அப்புறம் அதை முடித்து போஜனம் பண்ண வேண்டுமாதலால் அதுவரை பசி எடுக்காமலிருக்கவே பித்த ஜலமும் வெளியே போக வேண்டாமென்று பல் தேய்க்கிறதை இப்படி relax செய்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார்.

அதாவது இதுவும் தாக்ஷிண்யத்தோடு ஆசாரம் பண்ணிக் கொடுத்திருப்பதில் சேரும்.