த்ருப்யத... த்ருப்யத... த்ருப்யத....

த்ருப்யத... த்ருப்யத... த்ருப்யத....
==============================
வைதரணி நதியைக் கடந்து யமபட்டணம் சென்றவர்கள் புரட்டாசியில் வரும் அமாவாசையிலிருந்து பதினைந்து நாள்களுக்கு முன்னர் பூமிக்கு பித்ருக்களாக நம் வீடு தேடி வருகிறார்கள். வைதரணி நதியைக் கடந்து யமலோகத்திற்கு ஜீவன் செல்கிறது என்ற நமது இந்து மத சாஸ்திரங்களைப் போலவே கிரேக்கத்திலும் இருக்கிறது என்று தெய்வத்தின் குரலாக மஹா பெரியவா சொல்கிறார். Styx என்ற நதியைக் கடந்து மறு லோகமான Hadesக்கு செல்கிறார்களாம்.

அப்படி பிதிர்லோகத்திலிருப்பவர்களுக்குப் பதினைந்து நாள்கள் மஹாளய பக்ஷம் என்பது வெகேஷன். பக்ஷத்திற்கு பதினைந்து நாள்கள் கணக்கு. தனது பிள்ளைகள் பேரன்களிடம் பசியும் தாகமும் போக எள்ளும் தண்ணீரும் வாங்கிக்கொண்டு திருப்தியாக ஆசி வழங்கிவிட்டுச் செல்கிறார்கள். அப்பா செத்து போகும் போது நான் திருச்சியிலே இருந்தேன். இப்போ சென்னையில இருக்கேன். என் வீடு இப்போ பித்ருவாக வரும் அப்பாவுக்குத் தெரியுமா? ஒரு லக்ஷம் பசுக்கள் ஒரு மைதானத்தில் கூட்டமாகத் திரிந்தாலும் ஒரு லக்ஷம் கன்றுகளை அந்த மைதானத்திற்குள் பால் குடிக்க விரட்டிவிட்டால் ஒவ்வொறு கன்றும் மிகவும் சரியாக தனது அம்மாவிடம் பால் குடிக்கும். இதுதான் தாத்பரியம். அதுபோல நாம் சொல்லும் மந்திரங்கள் நம் பித்ருக்களின் காதில் விழுந்து நம் முகவரி சொல்லுமாம்.

தேவகார்யங்களை எவ்வளவு சிரத்தையாக செய்கிறோமோ அவ்வளவு சிரத்தை பித்ருகார்யத்திலும் இருக்கவேண்டும் என்று வேதங்கள் சொல்கின்றன. ராமனாக மனித அவதாரமெடுத்த நாராயணனே தனது தந்தையான தசரதனுக்கு தான் வனவாசத்தில் இருந்த பதினான்கு வருஷங்களும் சிராத்தம் செய்தான் என்று வால்மீக ராமாயணம் தெரிவிக்கிறது. சரஸ்வதிக்கு கோயிலிருக்கும் கூத்தனூர் அருகே வரும் திலதர்ப்பணபுரியில் ராமன் தசரதனுக்கு தர்ப்பணம் செய்தான் என்ற புராண சங்கதி உண்டு. அமாவாசை தர்ப்பணங்களின் புண்ணியத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு புண்ணியம் தருவது மஹாளய பக்ஷ தர்ப்பணம்.

நாம இங்கே தர்ப்பணம் பண்றது எப்படி பிதிர்களுக்கு எப்படி போய்ச் சேரும்? என்ற கேள்விக்கு மஹாபெரியவா தெய்வத்தின் குரலில் ஒரு உதாரணம் சொல்கிறார். வெளியூரில் இருக்கும் பையனுக்கு பணம் அவசரமாகத் தேவைபபடுகிறது. தகப்பன் உள்ளூர் தந்தி ஆஃபீஸிக்குச் சென்று தந்தி மணியார்டர் அனுப்புகிறான். பணத்தை அந்த அலுவலரிடம் கொடுத்துவிட்டால் "அவர் அனுப்பியாச்சு" என்கிறார். ஆனால் அவர் கையில்தான் பணம் இருக்கிறது. பையனுக்கு அங்கே கொடுத்துவிட்டார்கள். இப்படித்தான் இதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மஹா பெரியவா.

கண்ணால் நாம் இதுவரை பார்க்காத தெய்வங்களுக்கு செய்யும் தேவகார்யங்களை விட மேன்மையானதாக நாம் பார்த்துப் பழகிய நம் தாத்தா பாட்டி அப்பா அம்மா என்று எல்லோரையும் பித்ருக்களாக பூஜிப்பது சிறந்தது என்று தைத்ரிய உபநிஷதம் கூறுகிறது. சாஸ்திரங்கள் பிதிர்கார்யத்துக்கு முக்கியத்துவம் நிறையக் கொடுக்கிறது. எல்லா அமாவாசை, கிரஹன மற்றும் பிதிர்காரியங்களிலும் அப்பா வழியில் ஆறு பேர் அம்மா வழியில் ஆறுபேர் மட்டும் எள்ளும் நீரும் வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் மஹாளய பக்ஷத்தின் போது எல்லோருக்கும் தர்ப்பணம் செய்யலாம். சபத்னி மாதா என்று அப்பாவின் இரண்டாவது மனைவிக்கும் ஆசாரியனுக்கும் ஸ்நேகிதனுக்கும் சித்தப்பா பெரியப்பா அம்மாவின் சகோதரனான மாமா, மனைவியின் அப்பா... மாமனார்... மச்சினன் என்று இறந்து போன அனைவருக்கும் தர்ப்பணம் செய்வது மஹாளய பக்ஷத்தின் மாபெரும் சிறப்பு. இப்படி வருபவர்கள் அனைவரும் கருணை நிரம்பியவர்கள் என்பதால் காருணிகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 

"என் தாயாகவோ, தந்தையாகவோ, சகோதரனாகவோ இல்லை வேறு எந்த உறவினராகவோ இல்லாமல் இவ்வுலகை விட்டுச் சென்றவர்கள் யாவர்க்கும் அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய இந்த எள்ளும் நீரும் தெளிக்கிறேன். அவர்கள் திருப்தியடைவார்களாக, திருப்தியடைவார்களாக, திருப்தியடைவார்களாக!!"  என்ற ஒற்றுமையுணர்வு ஓங்கிப் பிரதிபலிப்பதாக எல்லோருக்கும் தர்ப்பணம் செய்து அவர்களின் பரிபூர்ண ஆசியைப் பெறுவதே மஹாளய பக்ஷத்தின் சிறப்பாகும். 

யேஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா
ந சபாந்தவஹா
தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா
உச்ரிஷ்டைஹி குஸஉதஹைஹி
த்ருப்யத த்ருப்யத த்ருப்யத:

**
இந்த வருஷம் செப்டம்பர் 14 முதல் 28வரை மஹாளய பக்ஷம். பதினாறு நாளைக்கும் ஆறு பிராமணர்களை வச்சு சிராத்தம் பண்ணலாம். அல்லது அரிசி வாழைக்காய் கொடுத்து ஹிரண்ய சிராத்தமா பண்ணலாம். அதுவும் இல்லைன்னா பதினாறு நாளும் தர்ப்பணமாவது பண்ணலாம்."  என்கிறார் வைதிக ஸ்ரீ ராஜகோபால கனபாடிகள்.

"மஹாளய பக்ஷம் பூராவும் ஷவரம் செய்துகொள்ளக்கூடாது, பரான்னம் என்னும் சகோதரன் சகோதரி மாமனார் தவிர்த்து வெளியிடங்களில் சாப்பிடக்கூடாது, வெங்காயம் சேர்த்துக்கொள்ளக் கூடாது, ஹோட்டல் பக்கம் தலைவச்சே படுக்கக்கூடாது... எண்ணெய் தேய்ச்சு குளிக்கக்கூடாது..." என்று விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் சொல்றார் வைதீக ஸ்ரீ கனபாடிகள்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியைப் பெற்று வாழ்வில் ஏற்றம் பெறுவோம்!!