தி. வே. சுந்தரம் அய்யங்கார் (T V Sundaram Iyengar)

தி.வே.சுந்தரம் அய்யங்கார் - 22 March 1877, (திருக்குறுங்குடி) - 28 April 1955, (கொடைக்கானல்)


’எலே... தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு வண்டி ஓடும்?’’ என்று, செய்தி சொன்னவரை அனைவரும் கேலி செய்தார்கள்.

ஆனால், உண்மையிலேயே கண்ணெதிரே அந்த வாகனம் வந்தபோது ஆச்சர்யத்தில் திகைத்து நின்ற கிராம மக்கள், ‘இதென்ன ஸ்ரீ ராம பாணமோ? ஸ்ரீ கிருஷ்ண ரதமோ!’ என ஆச்சர்யத்தில் கண்கள் கலங்க, ஆனந்தக் கூத்தாடி அந்த வாகனத்தை விழுந்து வணங்கினார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து நடந்து தேய்ந்து போயிருந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வுகொடுத்து, பேருந்துகளில் பயணிக்கவைத்த பெருமை டி.வி.சுந்தரம் ஐயங்காரையே சேரும். 

இன்றைக்கு 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொண்ட மகா விருட்சமாய், ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கும் மேல் வியாபாரம் செய்யும் வர்த்தகக் குழுமமாய் பரந்து விரிந்திருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தைச் சேர்க்காமல் ஆசிய ஆட்டோமொபைல் வரலாற்றை எழுதமுடியாது.

1877 மார்ச் 22-ல் டி.வி. சுந்தரம் (சுருக்கமாக டிவிஎஸ்) பிறந்தார். திருச்சூரின் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டு ஆண்டுகளும், திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் போதனா பயிற்சிக் கல்லூரியிலும் படித்தார். அவரின் மனம் தொழில் தொடங்கவேண்டும் என்பதில் மையம் கொண்டு இருந்ததே தவிர, பெற்றோர் விரும்பியபடி படித்து வக்கீலாக வேண்டும் என்று நினைக்கவில்லை.

கல்லூரியில் இருந்து வெளியேறி, பிரம்பு, சவுக்கு போன்றவற்றை வர்த்தகர்களுக்கு மொத்த விற்பனை செய்யத் தொடங்கினார். பிறகு திருச்சியிலும் தஞ்சையிலும் ரயில்வே குமாஸ்தாவாக சில காலம் வேலை பார்த்தார். தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, தனது பங்காகக் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு, தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரம் செய்யலானார்.

25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து நான்கு ஆண்டுகள் மர வியாபாரம் செய்ததில் 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. அந்த 50 ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு, கான்பகதூர் காதர் நவாஸ்கான் என்ற பிரமுகருடன் கூட்டாக 1912-ம் ஆண்டு தஞ்சாவூர்- புதுக்கோட்டை வழித்தடங்களில் பேருந்து சேவையை நடத்தத் தொடங்கினார். அதுதான் ஆரம்பம்!

அந்தக்கால பேருந்துகளில் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் பேரம் பேசித்தான் கட்டணம் வசூல் செய்யப்பட்டுவந்தது. மேலும், ஆட்கள் நிறையும் வரை பேருந்தை நிறுத்திக் காத்திருப்பது, கால வரையறை இல்லாமல் நினைத்த நேரத்துக்கு பேருந்தை இயக்குவது என்று ஒரு ஒழுங்கில்லாமல் இருந்த முறையை மாற்றியமைத்து, இன்றைக்கு இருக்கும் ‘இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு கட்டணம்’ என்னும் நடைமுறையையும், பயணிகள் கொடுக்கும் காசுக்கு ‘ரசீது வழங்குவது’ என்னும் நடைமுறையையும் கொண்டுவந்தவர் டிவிஎஸ்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பேருந்து எப்போது புறப்பட்டு, எப்போது போய்ச் சேரும் என்பதே தெரியாமல் இருந்ததை மாற்றி, ‘குறிப்பிட்ட நேரத்துக்கு இந்தப் பேருந்து புறப்படும்’ என்ற நடைமுறையை நாட்டுக்கே டிவிஎஸ்தான் அறிமுகப்படுத்தினார்.

வாகனங்களின் டயர்களும், பாகங்களும் விரைவில் தேய்ந்து போவதற்கும், எரிபொருள் அதிகமாகச் செலவாகி பொருளாதார இழப்பு ஏற்படுவதற்கும் குண்டும் குழியுமான சாலைகளே காரணம் என்பதை மிக தாமதமாகக் கண்டறிந்த அரசாங்கம், பிற்காலத்தில்தான் தரமான தார்ச் சாலையை அமைத்தது. இதனை அப்போதே உணர்ந்திருந்த டிவிஎஸ், பேருந்து செல்லும் சாலைகளைப் பராமரிக்கும் கான்ட்ராக்ட்டையும் தானே எடுத்துக் கொண்டார். இதன்மூலம் சாலைகளில் காணப்பட்ட குண்டு, குழிகள் விரைவில் மறைந்ததோடு பேருந்து டயர்களின் ஆயுட்காலமும் நீடித்தது.

சாலைகளில் கழன்று விழுந்து கிடக்கும் மாடு, குதிரைகளின் லாடங்களால் டயர் பஞ்சராகி பேருந்துகள் அடிக்கடி நின்றுபோயின. இதனைத் தடுக்க ஒரு காந்த வண்டியை டிவிஎஸ் அறிமுகப்படுத்தினார். ஏறத்தாழ நான்கு அடி நீளமுள்ள பெரிய காந்தம் பொருத்தப்பட்ட வண்டியை சாலையில் ஓட விட்டார். சாலையில் கிடந்த அனைத்து இரும்புகளும் காந்தத்தில் ஒட்டிக்கொண்டுவிட, டிவிஎஸ் பேருந்துகள் பஞ்சர் ஆகாமல் ஓடலாயின.

புதுக்கோட்டையில் பஸ் சர்வீஸ் நடத்தி வந்தபோதே, மேலைநாடுகளில் இருந்து மோட்டார் வாக னங்களையும், இயந்திரங்களின் உதிரிப்பா கங்களையும் சிறியஅளவில் இறக்குமதி செய்து மற்ற பேருந்து நிறுவனங்களுக்கு டிவிஎஸ் விற்பனை செய்துவந்தார். புதுக்கோட்டை பஸ் சர்வீஸ் ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் மதுரையில் சிறிய அளவில் ஒரு வியாபார நிறுவனத்தைத் தொடங்கினார். சைக்கிள்களையும், மோட்டார் வாகன உதிரி பாகங்களையும் விற்றுவந்த அந்த நிறுவனமே பலவிழுதுகள் பரப்பி விரிந்து நிற்கும் இன்றைய டிவிஎஸ் ஆலமரத்தின் விதையாகும்.

1929-ல் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் வாகனங்களுக்கும், உதிரிப்பாகங்களுக்கும் டிவிஎஸ் நிறுவனம் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் ஆரம்பமானது.

முனிவருக்கே மணி சொன்ன டிவிஎஸ் பஸ்!

ஒருமுறை திருநெல்வேலி செல்லும் வழியில் தன் பரிவாரங்களுடன் புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மகா பெரியவர். உறங்கச் செல்லும் முன் அதிகாலை மூன்றரை மணிக்குத் தன்னை எழுப்பிவிடுமாறு, சீடர் நாகராஜனிடம் சொல்லிச் சென்றார். முதல் மூன்று நாட்கள் கடிகாரத்தைப் பார்த்து சரியான நேரத்துக்கு ‘‘ஹர ஹர சங்கர...’’ என்று கோஷமிட்டு எழுப்பிய சீடர், நான்காம் நாள் மெய்மறந்து உறங்கிவிட்டார். ‘

‘ஹர ஹர சங்கர...’’ என்ற குரல் கேட்டு சீடர் திடுக்கிட்டு விழித்தால், எதிரே மகா பெரியவர் நிற்கிறார். ‘‘கொழந்தே! மணி சரியா மூணரை ஆறதுடாப்பா...’’ என்று சொல்ல, சீடருக்கு மிகவும் வெட்கமாகப்போய்விட்டதாம். சோதனையாக மறுநாளும் சீடர் உறங்கிவிட, அன்றும் பெரியவாளே அவரை எழுப்பிவிட்டாராம். ‘அதெப்படி எந்தக் கடிகாரமும் இல்லாமல், சரியாக அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்துவிடுகிறார்’ என்று சீடருக்கு எழுந்த சந்தேகத்தை பெரியவாளே தீர்த்து வைத்தாராம்.

‘‘முதல் நாள் நீ எழுப்பி விட்டபோது, மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு வர்ற டிவிஎஸ் பஸ் நம்ம சத்திரத்தைக் கடந்து போறதைப் பார்த்தேன். ‘டிவிஎஸ் பஸ் ஒரு இடத்துக்கு வர்ற குறிப்பிட்ட டயத்தை வெச்சுண்டே, நம்ம கடிகாரத்தை கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்’னு சொல்லுவா. அது வாஸ்தவம்தான். சத்திரவாசலுக்கு அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரை மணிக்கு வந்து தாண்டிப் போறது. இதை வெச்சு நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்டவுடனேயே தானா எந்திருச்சுட்டேன்...’’ என்று ரகசியத்தை உடைத்தாராம் பெரியவாள். டிவிஎஸ் பேருந்துகளின் நேரம் தவறாமைக்கு இந்த ஒரு உதாரணம் போதாதா..!

இப்போது போலவே அப்போதும் கார்கள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ்தான் முன்னணியில் இருந்தது. 1929-ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கும், உதிரிப் பாகங்களுக்கும் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றதுதான் டிவிஎஸ் வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை!

முட்டைக்கோஸ் புதிதாக மார்க்கெட்டுக்கு வந்தபோது, அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதை யாருமே வாங்கவில்லையாம். காய்கறிக்கே இந்த நிலை என்றால், ஆயிரக்கணக்கான ரூபாய் விலைமதிப்புடைய காருக்கு..?
குதிரையிலும், மாட்டுவண்டியிலும் பவனி வந்து கொண்டு இருந்த ஜமீன்தார்களிடம் கார்களை விற்பனை செய்ய, டி.வி.சுந்தரம் ஐயங்காரின் குமாரர் துரைசாமி செய்த யோசனை ஆச்சர்யமானது.

புது காருடன் நேரடியாகச் செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்குப் போவாராம். டிரைவரையும் காரையும் அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு, அந்தச் செல்வந்தர் அதுவரை பயணித்து வந்த குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிடுவாராம். மறுபடியும் ஒரு வாரம் கழித்து அவரது வீட்டுக்குச் செல்வாராம்.

இடைப்பட்ட நாட்களில் காரில் பயணித்து பயணித்து, அதன் சொகுசுக்கு அடிமையாகிவிட்டிருப்பார் அந்தச் செல்வந்தர். ஊராரையும் மற்ற ஜமீன்தார்களையும் வாய்பிளக்க வேடிக்கை பார்க்கவைக்கும் அந்த காரை, திருப்பித் தர மனம் இல்லாமல் தேவையான பணத்தைக் கொடுத்து, காரை வாங்கிவிடுவார் ஜமீன்தார். இப்படி மிக எளிதாக காரை விற்றுவிட்டு, வெற்றிகரமாக வீடு திரும்புவாராம் துரைசாமி.
குதிரை வண்டியை வாங்கிக்கொண்டு, காரை விற்ற அந்தத் திட்டமே, பழையதைக் கொடுத்து புதிய பொருட்களை வாங்கிச் செல்லும் ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி!

நானும் ஒரு தொழிலாளி!

ஆறேழு பேர் பணிபுரியும் மளிகைக் கடையிலேயே தொழிலாளர் பிரச்னை தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது. அப்படியானால் பல்லாயிரம் பேர் பணிபுரியும் நிறுவனத்தில்?தினம் தினம் பிரச்னையாகத்தானே விடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு ‘தொழிலாளர் போராட்டம் என்று எதுவும் நடந்ததே இல்லை’ என்கிறார்கள் டிவிஎஸ் நிர்வாகிகள்.

தொழிலாளர்கள்தான் நிறுவனத்தை இயக்குகிறார்கள் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் டிவிஎஸ் நிறுவனத்துக்குத்தான் உண்டு. காலையில் இலை போட்டுப் பரிமாறப்படும் இட்லி - சாம்பாரை சாப்பிட்டுவிட்டுத்தான் தொழிலாளர்கள் வேலைக்கே செல்வார்களாம்.

பணியாளர்களின் பசியைத் தீர்த்தது மட்டுமல்லாமல் வசிக்கக் குடியிருப்புகள், குழந்தைகளின் கல்விக்குப் பள்ளிக்கூடம், சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனை என்று தொழிலாளர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் டிவிஎஸ் நிறுவனத்தில் செய்து கொடுக்கப்பட்டதாலேயே, தாத்தா-அப்பா-பேரன்-கொள்ளுபேரன் என்று நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற பல குடும்பங்கள் உண்டு.

குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு தொழிலாளர் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த டிவிஎஸ், தம் வாரிசுகள் அனைவரையும் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்யுமாறு செய்தார். அந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.

டிவிஎஸ் நிறுவனத்தில் இன்றைக்கு இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கும் அனைவரும், காக்கி யூனிஃபார்முடனும் கிரீஸ் கறையுடனும் தொழிலாளிகளோடு தொழிலாளியாக வேலை செய்தவர்கள்! அதனால்தான் தங்கள் தொழிலாளர்களின் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கவும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. டிவிஎஸ்-ஸில் ஐ.என்.டி.யு.சி எனும் ஒரே ஒரு தொழிற்சங்கம்தான் இருக்கிறது. தொழிற்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முன்னரே அவர்களை அழைத்துப் பேசி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பார்களாம்!
ஒரு வேலையைச் செய்யும் தொழிலாளர்களால்தான் அந்த வேலையை எளிதாகச் செய்து முடிப்பதற்கான தீர்வையும் சொல்ல முடியும் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களை நிர்வாக யோசனைகளிலும் பங்கேற்க வைத்தார். கம்பெனியில் ஓர் ‘ஆலோசனைப் பெட்டி’யை வைத்து, அதில் ஆலோசனைகளை எழுதிப்போடுமாறு கேட்டுக் கொண்டார்கள். வீண் செலவைக் குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளை, தொழிலாளர்கள் எழுதிப் போட்டனர். சிறந்த யோசனைகளைச் சொன்னவர்களுக்குப் பரிசுகளும் உண்டு.

‘இது நம் நிறுவனம். இதை முன்னேற்ற வேண்டியது நம் கடமை’ என்னும் உணர்வு முதலாளிக்கு ஏற்படுவது வியப்பானதல்ல. ஆனால், அது கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளிக்கும் ஏற்பட வேண்டும். அதில்தான் அந்த நிறுவனத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த எண்ணத்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளம்!
ஐடியாவுக்குப் பரிசு!

‘‘தொழிலாளர்கள் ஸ்க்ரு டிரைவர், ஸ்பேனர் போன்றவற்றை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது கையில் ஒட்டியிருக்கும் கிரீஸும், ஆயிலும் துணியில் பட்டு நீக்க முடியாத கறையாக மாறிவிடுகிறது. அதனால் சீருடையில் பாக்கெட்டே தேவையில்லை’’ என்று ஒரு தொழிலாளர் ஆலோசனை சொன்னாராம். பல மீட்டர் துணியையும், சலவைச் செலவையும் மிச்சமாக்கி, உடைகளின் தூய்மையையும் பாதுகாத்த அந்தத் தொழிலாளரின் யோசனைதான் இன்றளவும் டிவிஎஸ்-ஸிலும் மற்ற பெரும்பாலான கம்பெனிகளிலும் நடைமுறையில் இருக்கிறது.

எதுவும் முடியும்!

‘இது என் வேலை இல்லையே..!’ என்று சொல்லாமல், எந்த வேலையைக் கொடுத்தாலும் டிவிஎஸ் தொழிலாளர்கள் செய்வார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். 1960-களில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் பெய்த மழையில், ஒருமாதம் செலவழித்துப் போடப்பட்டிருந்த, மிகப் பெரிய மாநாட்டுப் பந்தல் அப்படியே சரிந்து விழுந்துவிட்டது. மறுநாள் எப்படி மாநாட்டை நடத்துவது என்று தெரியாமல் ஏற்பாட்டாளர்கள் விழிக்க, டிவிஎஸ் குமாரர் கிருஷ்ணா உதவ முன்வந்தார். ஒரு மாதமாகப் போடப்பட்ட பந்தலை ஒரே இரவில் சரிசெய்து சாதனை படைத்தார்களாம் 
டிவிஎஸ் தொழிலாளர்கள்.

மேலும் சம்பவம் ஒன்று... மதுரை ஏர்போர்ட்டில் இறங்கிய விமானத்தின் முன் சக்கரம் உள்பக்கமாக அழுந்திக் கொள்ள, விமான நிலையத்தின் இன்ஜினீயர்கள் காலை 8 மணிமுதல்மதியம் 2 மணி வரை போராடிப்பார்த்தும் சிக்கலைத் தீர்க்க முடியவில்லையாம். இந்தத் தகவல் டிவிஎஸ் நிறுவனத்துக்கு வர, ஊழியர்கள் புறப்பட்டுப் போனார்களாம். ‘நாள்தோறும் விமானத்தோடு புழங்கும் இன்ஜினீயர்களாலேயே முடியவில்லை. இவர்களால் என்ன செய்ய முடியும்’ என்று விமான நிலையத்தில் வேலை பார்க்கும் சிலர் இவர்கள் காதுபடவே கருத்துச் சொல்லிஇருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இவர்களை முதலில் விமான நிலையத்தின் உள்ளேயே விட மறுத்து விட்டார்களாம். ‘இது வரை விமானத்தை அருகில் சென்று பார்த்ததே இல்லை. ரிப்பேர் செய்யும் சாக்கிலாவது அருகில் சென்று பார்த்து விட்டு வருகிறோமே’ என்று டிவிஎஸ் ஊழியர்கள் சாதுர்யமாகப் பேசி விமானத்துக்கு அருகே சென்று, தங்களை அழைத்த அதிகாரிகளைப் பார்த்திருக்கிறார்கள். அந்த அதிகாரி விமானத்தைக் காட்டி பிரச்னையை இவர்களிடம் சொன்னார். பல மணி நேரம் முயன்றும் விமான நிலைய இன்ஜினீயர்களாலேயே சரி செய்ய முடியாத வேலையை விமானிகளே வியக்கும் வண்ணம் பத்தே நிமிடத்தில் சரிசெய்து விட்டார்களாம் டிவிஎஸ் தொழிலாளர்கள். எப்படி?

டிவிஎஸ்-ஸின் தங்குதடையில்லாத சேவைக்கு உதாரணமாக விளங்கக்கூடிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. உலகப் போர் முடிந்த சமயத்தில் கடுமையான பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு நிலவியது. பொதுமக்களுக்கு ஒரு சொட்டு பெட்ரோல்கூட கிடைக்கவில்லை. இந்தச் சமயத்திலும் தனது பஸ் சர்வீஸை நிறுத்த விரும்பாத டிவிஎஸ், பேருந்துகளில் கரி இன்ஜினைப் பொருத்தி ஓட்டத் தொடங்கினார். இந்த இன்ஜினைத் தயார்படுத்தவே இரண்டு மணி நேரம் தேவையாம். கரியை எரிக்கும்போது வெளிப்படும் வெப்ப ஆவி சிலிண்டர்களில் சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் பேருந்து ஓட்டப்பட்டது. இதற்காகப் பேருந்து செல்லும் வழியில் ஆங்காங்கே கரி நிரப்பும் இடங்களும் நிறுவப்பட்டன!

சுந்தரம் அய்யங்கார் முற்போக்குச் சிந்தனை கொண்டவர். இளம்வயதில் கைம்பெண்ணான தன் மகள் தி. சு. சௌந்தரத்துக்கு மகாத்மா காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்தார். தி. சு. சௌந்தரம் இந்திய விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய அரசு தி. சு. சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை பெருமைப்படுத்தியது .

வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர் கலைகளையும் ஆதரித்தார் . தான் ஓய்வு பெற்று வணிகத்தை தன் மகன்களிடம் ஒப்படைத்ததைக்கண்டு இராசகோபாலாச்சாரி இவரைப் பாராட்டினார். ஏப்ரல் 28, 1955 இல் அதிகாலையில் கொடைக்கானலில் உள்ள தன் வீட்டில் இறந்த போது இவரது வயது 78. இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வெண்கலமும் பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு உருவச்சிலை மதுரையில் ஆகஸ்டு 7, 1957 இல்
அந்நாள் மத்திய வணிக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது